காஷோகி கொலை: சவூதி இளவரசர் மீது சிஐஏ பழி சுமத்தவில்லை

காஷோகி கொலை: சவூதி இளவரசர் மீது சிஐஏ பழி சுமத்தவில்லை

1 mins read

வா‌ஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொலைக்குச் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தர விட்டதாக அமெரிக்காவின் உளவுத்துறை பழி சுமத்தவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காஷோகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இளவரசர் சல்மானின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்காது என அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித் திருந்தனர். இந்நிலையில் திரு டிரம்ப், "அவர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்று சிஐஏ மதிப்பீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

"அவர்கள் பல விதத்தில் நினைக்கலாம். இன்னும் முடிவு எட்டப்படாத அறிக்கை என்னிடம் உள்ளது. இதற்குப் பட்டத்து இளவரசர்தான் காரணம் என்று யாராலும் முடிவுக்கு வரமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை," என அவர் தெரிவித்தார். காஷோகி கொலைக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு சவூதி அரேபியாவின் முக்கியத்துவம் குறித்து அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அமெரிக்காவில் சவூதி அரேபியா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. அந்த நாட்டுடன் அமெரிக்கா எப்போதுமே உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் இரு நாடுகளின் உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.