வேலூர்: கழிவறை கட்டித்தரக் கேட்டு சிறுமி நடத்திய போராட் டத்தை அடுத்து அவரது வீட் டில் கழிவறை கட்ட வேலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆம்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இஷானுல் லாவின் 7 வயது மகள் ஹனீபா ஜாரா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். வீட்டில் கழிவறை இல்லாததால் பெரும் அவதி அடைந்த இச்சிறுமி, கழிவறை கட்ட வேண்டும் என தன் தந்தையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. நன்றாகப் படித்து பள்ளியில் முதலிடம் பிடித்தால் கழிவறை கட்டுவதாகக் கூறிய தன் தந்தை, வகுப்பில் முதலிடம் பிடித்தும்கூட தனது கோரிக் கையை தந்தை நிறைவேற்ற வில்லை என புகார் தெரிவித்துள் ளார் சிறுமி.
இந்நிலையில் தன் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும், கழிவறை கட்டித் தருவதாக எழுத்து மூலம் அவரிடம் உறுதிமொழி பெற்றுத்தரக் கோரியும், தன் கைப்பட எழுதிய மனு ஒன்றை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்தார் சிறுமி ஹனீபாஜாரா. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் வளர்மதி, சிறுமியைப் பாராட்டியதுடன், நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு பேசி விவரம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கழிவறைக் காக சிறுமி ஹனீபாஜாரா போராடுவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன் உடனடியாக ஆம்பூர் நகராட்சி ஆணையரை தொடர்புகொண்டு சிறுமியின் வீட்டில் தனிநபர் கழிவறை ஒன்றைக் கட்டித் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

