சேலம்: தங்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அமமுக கட்சி உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் கட்சியில் சேர்ந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு தங்கள் கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி யில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பழனிசாமியின் சொந்த நிதியில் இருந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக் கோட்டை மாவட்டத்திற்கு 30 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனத்தை பழனிசாமி கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய பழனிசாமி,
"அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் இணையவேண்டும். ஏற்கெனவே இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட அமைப்புச் செயலாளர் உட்பட பலர் அதிமுகவில் இணைந்தனர். இன்னும் பலர் இணைய உள்ளனர். எனவே மீண்டும் சொல்கிறோம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணையவேண்டும். அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எங்களது கடமை. டிடிவி தினகரனைத் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். "அதிமுகவுக்கு எப்போதும் ஒரே நிலைப்பாடுதான் உள்ளது. அண்மையில் அமமுகவில் இருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுகவில் உரிய மரியாதை அளிக்கப் பட்டது. வருங் காலங்களிலும் அமமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும்," என்றார்.

