சென்னை: அதிமுகவில் இருந்து விலகி அமமுக கட்சி உறுப்பினராக இருந்து வந்தவர்களுள் ஒருவரான செந்தில் பாலாஜி இன்றைய தினம் முதல் திமுகவில் இணைய இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாளை மறுநாள் 16ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் இன்றே திமுக வில் சேர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பான பேச்சாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக் குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பின், டிடிவி அணியில் சேர்ந்துகொண்டார். இதையடுத்து பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி செந்தில் பாலாஜி உட்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அமமுக தலைமை மீது அண்மை காலமாக செந்தில் பாலாஜிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல், குடும்பம் என அனைத் திலும் தாமே எல்லாம் என்கிற எண்ணத்தில் டிடிவி தினகரன் வலம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத னால் அவரிடம் இருந்து ஒவ் வொருவராக விலகி வருவதாக கூறப்படுகிறது.

