அபராதம், சேவைக் கட்டணம் மூலமாக இந்திய வங்கிகள் `10,000 கோடி வசூல்

2 mins read

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களிடம் இருந்து வசூலித்த அபராதம், ஏடிஎம் சேவைக் கட்டணம் போன்றவை மூலமாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 21 இந்திய பொதுத்துறை வங்கிகள் ரூ.10,391 கோடியை (S$2 பில்லியன்) வசூலித்துள்ளன. அவற்றுள் அதிகபட்சமாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,894 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங் களில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்து இருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக் கப்பட்டுள்ளது. இதுதவிர, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்தாமல் வேறு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுத்த தற்காக ரூ.850 கோடிக்கும் மேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் தொடர்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திப்யேந்து அதிகாரி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப் பினார். அதற்கு, எழுத்துமூலம் நிதியமைச்சு அளித்துள்ள பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர் களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து அந்த வங்கி சற்று இறங்கி வந்தது. பெருநகரங்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 5,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகக் குறைத்தது. அதேபோல, அபராதத்தையும் 20% முதல் 50% வரை குறைத்தது. அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத் தொகைத் திட்டத்தின்கீழும் பிரதமரின் 'ஜன்தன்' திட்டத்தின்கீழும் கணக்கு வைத் துள்ளோருக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.