2019 பொதுத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் உறுதி

2019 பொதுத் தேர்தலில் போட்டி: கமல்ஹாசன் உறுதி

1 mins read

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாகப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அவர் அறிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் கமல் நேற்று ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் கமலுக்கு வழங்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், "தமிழ் நாட்டின் பிரச்சினைகளை முன்வைத்துத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம். தமிழ கத்தின் மரபணுவை மாற்றத் துடிக்கும் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம்," என்று கூறினார். தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தாமும் ஒரு வேட்பாளராகக் களம் காணத் தயார் என்றார் அவர்.