தமிழகத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எச்ஐவி கிருமித்தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் இந்த மாதம் 3ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ரத்த வங்கித் தலைவர் டாக்டர் சிந்தா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது அவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவர் ரத்த தானம் செய்து இருந்தார்.
இதையடுத்து, தமது ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட ரத்த வங்கிக்கு தகவல் அளித்தார்.
ஆனால், அதற்கு முன்பாகவே அவரது ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்றப்பட்டுவிட்டது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் ரத்த மாதிரியைச் சோதனை செய்த போது அவர் எச்ஐவியால் பாதிக் கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் பணியாற்றும் வளர்மதி உள்ளிட்ட மூன்று ஒப்பந்த ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அம்மூவரும் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், "என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே எனது இந்நிலைக்குக் காரணம். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்குப் பதிலாக அரசே என்னைக் கொன்றிருக்கலாம். மக்கள் யாரும் என்னை வித்தியாசமாகப் பார்க்காமல் என்னை அவர்களில் ஒருவராக நினைக்க வேண்டும்," எனக் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இவ்விவகாரத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பெண் போலிசில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் மனமுடைந்து காணப்படுகிறார்.
"சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை. மருத்துவமனை ஊழியர்களின் தவற்றால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று சொன்னால் யாரும் நம்புவார்களா? ஒருவகையில் பார்த்தால், இதுவும் ஒரு கொலைதான். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்," என்று அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், விருதுநகர் சுகாதார இணை இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகவும் கூறினார்.
இதனிடையே, மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியதோடு பாதிக்கப்பட்ட பெண்ணையும் சந்தித்துப் பேசினார்.
"பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படும்," என்று திரு ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது இதுவே முதன்முறை என்ற அவர், "இனி ஒருமுறை இதுபோல் நடக்கக் கூடாது. இதை நாங்கள் மிகவும் மோசமான சம்பவமாகப் பார்க்கிறோம். தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் சொன்னார்.
கர்ப்பிணியின் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் விளக்கமளித்துள்ளது.
அத்துடன், விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவுள்ளது.

