புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாரத ஸ்டேட் வங்கியில் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை கிரண்பாபு என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கக் கையூட்டு கேட்டதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த மே மாதம் வங்கி நிர்வாகம் கிரண்பாபுவை பணிநீக்கம் செய்தது. வங்கி நிர்வாகம் நடத்திய ஆய்வில் 4 கோடியே 95 லட்சம் ரூபாயை கிரண்பாபு மோசடி செய்திருப்பது தெரியவந்ததால் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. மோசடி பணத்தை மனைவி நிஷபாவின் வங்கிக் கணக்கில் அவர் பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர் களுக்கு வழங்கவேண்டிய வங்கிக் கடனில் வங்கி மேலாளர் ஒருவர் 4.95 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

