ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

1 mins read

சென்னை: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாகக் கூறி ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நடந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, ஆய்வு செய்தது. ஆய்வறிக்கையில் ஆலையைத் திறக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மூன்று வாரங்களில் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், ஆலைக்குத் தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.