புதுடெல்லி: பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய் வதற்கான மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித் துள்ளது. 'குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டம்', 2009ஆம் ஆண்டு நடப்புக்கு வந்ததையடுத்து, 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு கட்டாயத் தேர்ச்சி பெற்று வந்தனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக வும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் 24 மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யும் வகை யில், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்க ளவையில் ஏற்கெனவே நிறைவேற் றப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலை யும் மசோதா பெற்றுள்ளது. ஆனால், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர்.
மசோதா மீதான விவாதத் துக்குப் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "இந்தத் திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை, அதே வகுப்பில் மீண்டும் படிக்கச் செய்ய சம்பந் தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங் கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்," என்றார். "இந்தச் சட்டத்தால், படிப்பைப் பாதியில் கைவிடும் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரிக் கும் என்று கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்படமாட் டார்கள்," என்றார் அவர்.

