புதுடெல்லி: வணிக நெறிகளைப் பின்பற்றத் தவறியது, லேபிளில் தவறான தகவல் அளித்தது, தவறான தகவல்களுடன் விளம்பரம் ஆகியவற்றுக்காக 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்திடம் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் 640 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. மேகி நூடல்ஸை மைசூருவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்து அறிக்கை அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி ஆய்வறிக்கை விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதன் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மேகி நூடல்சில் ஈயம் மிகக் குறைந்த அளவே இருப்பதாக 'நெஸ்லே' தரப்பில் வாதிட்டதற்கு, "ஈயம் கலந்த மேகி நூடல்சை பிள்ளைகள் ஏன் சாப்பிடவேண்டும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

