புதிய விதிமுறைகளுக்கு சமூக ஊடகங்கள் பதில் நடவடிக்கை

இந்திய அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கும் புதிய விதிமுறைகளைச் சமாளிக்க அனைத்துலகச் சமூக ஊடக நிறுவனங்களும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்தியாவின் அரசுரிமைக்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதப் பதிவுகளை ஃபேஸ்புக், வாட்சப், டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்களது தளங்களிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றவேண்டும் என்று இந்தப் புதிய விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

பொதுமக்கள் இந்தத் திட்டம் குறித்து இம்மாதம் 31ஆம் தேதி வரை தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதன் பின்னர், இது தொடர்பில் சட்டம் ஒன்று உறுதி செய்யப்படும்.

இந்தியாவில் பொதுத்தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. சமூக ஊடகங்கள் வழியாகப் பரவும் போலியான செய்திகள் மக்களை திசைத்திருப்பலாம் என்று அரசாங்கம் கவலைப்படும் வேளையில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் இந்தச் சட்டம் தணிக்கை நடவடிக்கை போல் இருப்பதாகவும் இதனை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கருதுகின்றனர்.