சிபிஐயில் மீண்டும் தடாலடி: வர்மா போனார், ராவ் வந்தார்

புதுடெல்லி: இந்தியாவின் ஆக உயரிய புலன் விசாரணை அமைப்பான சிபிஐயில் கடந்த சில நாட்களாக பரபரப்பு கிளம்பி உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. அந்த அமைப்பின் இயக்கு நராக மறுபடியும் பொறுப்பேற்றுக்கொண்ட அலோக் குமார் வர்மா வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

அதனையடுத்து அந்தப் பதவியை நாகேஸ்வர ராவ் மீண்டும் ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்டதுமே இவர் வர்மா பிறப்பித் திருந்த அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு களை ரத்து செய்துவிட்டார்.

சிபிஐ அமைப்பில் கடந்த 3 நாட்களில் இந்த மாற்றங்கள் தடாலடியாக நடந்துள்ளன. அந்த அமைப்பில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கும் இந்த நிகழ்வுகள் அரசியல் மட்டத்திலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக் கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் இந்த விவகாரம் தொடர்பில் பாஜகவுக்கு எதிராக காரசாரமாக குரல் கொடுத்து வருகின்றன.

சிபிஐ என்பது இந்தியாவின் உச்ச ஊழல் புலன்விசாரணை அமைப்பாகும். அந்த அமைப் பின் இயக்குநராக அலோக் வர்மா பதவி ஏற்றுக்கொண்ட பிறகு அவருக்கும் சிபிஐயின் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக் கும் இடையில் பெரும் பிரச்சினை மூண்டது. இருவரும் பரஸ்பரம் ஊழல் புகார்களைச் சுமத்திக்கொண்டனர். இந்த நிலையில், மத்திய அரசாங்கம், அந்த இரண்டு அதிகாரிகளையும் கட்டாய ஓய்வில் அனுப்பிவிட்டு இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்தது.