பொங்கல் கொண்டாட்டத்தில் தமிழகம் முழுதும் வெகு உற்சாகத்துடன் கைவரிசை காட்டிய ஜல்லிக்கட்டு வீரர்களில் நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் இத்தகைய ஒரு ஜல்லிக்கட்டு ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர்களில் ஒருவராக நின்றுகொண்டிருந்த 45 வயது ஆடவர் ஒருவர் திடீரென மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசலில் அவர் மூச்சுவாங்க முடியாமல் மாரடைப்பில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருந்தபோதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு சளைத்தபாடில்லை. ஜல்லிக்கட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களைச் சிறப்பிக்கும் நினைவுச் சின்னம் ஒன்று அந்த ஊரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன. பதினைந்து காளைகளை வெற்றிகரமாக அடக்கிய 22 வயது கே. ரஞ்சித்குமாருக்குக் கார் பரிசாக வழங்கப்பட்டது.
பரம்பட்டி செல்லியம்மன் கோயிலைச் சேர்ந்த காளை ஒன்றுக்குத் தலைசிறந்த காளை விருது வழங்கப்பட்டது. அதன் பயிற்றுவிப்பாளர்களுக்குகம் கார் பரிசு வழங்கப்பட்டது.

