தீவிர அரசியலுக்கு வந்த பிரியங்கா

மோடிக்குச் சவாலாக பிரியங்காவை களமிறக்கியுள்ளது காங்கிரஸ். தீவிர அரசியலில் இறங்கியுள்ள ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி வத்ரா மோடியின் வாரணாசி தொகுயில் உள்ள உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது மக்களிடமும் கட்சியிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக பதவி வழங்கப்பட்டிருப்பதை முக்கிய காய் நகர்த்தலாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இந்திரா காந்தியின் சாயலில் இருக்கும் பிரியங்கா நிச்சயம் வாக்கு வங்கியை நிரப்புவார் என்று நீண்டகாலமாக நம்பப்பட்டு வருகிறது. அதனால் அவரை அரசியலில் இறங்குமாறு காங்கிரசின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல காலமாக கேட்டுவந்தனர். கடைசியாக பிரம்மாஸ்திரத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ். 

இந்நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீதுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் நோக்கத்தில் ஒரு கை பார்த்துவிட காங்கிரசும் அக்கட்சி தலைவர் ராகுலும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.