வாக்குப்பதிவு இயந்திரம்; நிபுணர் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: லண்டனில் ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகை யாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ‘ஸ்கைப்’ மூலம் உரையாற்றிய அமெரிக்க வாழ் இந்தியரும் தொழில்நுட்ப நிபுணருமான சையத் ‌ஷுஜா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஊடுருவ முடியும் என்று கூறியிருந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஊடுருவப்பட்டது என்று அவர் சொன்னார்.
மேலும் இந்த ரகசியம் அறிந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்று அவர் சந்தேகம் எழுப்பினார். ஆனால் சையத் ‌ஷுஜாவின் கருத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் எனத் தவறான தகவலைப் பரப்பியதாக தொழில்நுட்ப நிபுணர் சையத் ‌ஷுஜா மீது டெல்லி போலிசில் புகார் அளித்தது. இதையடுத்து சையத் ‌ஷுஜா மீதும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.