ஆசியா பீபியை நீதிமன்றம் விடுவித்தது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதஅவமதிப்புக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ் துவப் பெண் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதனால் மரண தண்டனையிலிருந்து ஆசியா பீபி தப்பியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் லாகூரின் புறநகரில் வசித்து வந்த  ஆசியா பீபி மீது தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராற்றின்போது முகம்மது நபியை அவமதிக்கும் வகையில் பேசியதாக மதஅவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த உத்தரவை 2014ல் லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் ஆசியா பீபி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்த வேளையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு 2018 அக்டோபர் 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உத்தர விட்டது.
அவர் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டை அரசு வழக்கறிஞர்கள் நிரூபிக்கத் தவறி விட்டனர் என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இப்போது அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டதால் அவர் விரும்பும் நாட்டில் குடியேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.