அமராவதியிலும் ஒரு திருப்பதி: ரூ.150 கோடியில் உருவாகிறது

அமராவதி: திருப்பதியில் உள்ளதைப்போன்ற இன்னோர் ஏழுமலையான் கோயில் ஆந்திரா மாநிலம் அமராவதியில் எழுப்பப்பட உள்ளது.  அதனை 150 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான பூமி பூஜை கோலாகலமாக நடந்துள்ளது. ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதில் உள்ள வெங்கடபாளையம் அருகில் ஏழு மலையான் கோயில் கட்ட மாநில அரசு தேவஸ்தானத்திற்கு என்று சுமார் 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கீடு செய்தது. அதில், ரூ.150 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. 

தற்போது அதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை கோலாகலமாக நடந்துள்ளது. இதில், ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு கோயில் கருவறை அமைய உள்ள நிலத்தை ஏர் கலப்பையால் உழுது பின்னர் நவதானியம் விதைத்து பூஜை நடத்தினார். 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறுகையில், “கடந்த 2003ம் ஆண்டு திருமலை மலைப் பாதையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து ஏழுமலையான் என்னை காப்பாற்றி மறுஜென்மம் அளித்துள்ளார். அப்போதிலிருந்து நான் தினசரி 10 நிமிடம் ஏழு மலையானை வழிபட்டு வருகிறேன். தற்போது பூஜை நடந்து முடிந் துள்ளது. இதையடுத்து அமராவதியில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டும் பணி முடிக்கப்படும்,” என்றார்.

நாடு முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் அமைக்கப்பட்டு வருகிறது. அண்மையில், தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் ஹைதராபாத்திலும் ஏழுமலையான் கோயில் திறக்கப்படவுள்ளது.