மேற்கு வங்காளத்தில் இந்திய மத்திய அரசு நேரடி நடவடிக்கை?

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையும் கோல்கத்தா போலிஸ் படையும் சம்பந்தப்படும் அண்மை நிகழ்வுகள் வருத்தத்தைத் தரக்கூடியவை என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். 

சீட்டு நிதி மோசடி தொடர்பில் கோல்கத்தா போலிஸ் தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்கச் சென்றிருந்த மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தடுக்கப்பட்டது இதுவரை நடந்திராதது என்று திரு சிங், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கூறினார். 

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காளத்தில் அரசியல் கட்சிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மத்திய புலனாய்வுத் துறையைப் பயன்படுத்தி தமக்கு தொல்லை கொடுப்பதாகக் குற்றம் சாட்டும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். 

மேற்கு வங்காள நிலவரம் குறித்து மாநில ஆளுநரிடம் அறிக்கை ஒன்றைக் கேட்டிருப்பதாக திரு சிங் தெரிவித்தார். சட்டத்துறை அமைப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு ஏற்ற சூழலை மேற்கு வங்காளமும் இதர மாநிலங்களும் ஏற்படுத்தித் தர திரு சிங் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.