மகாத்மா காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி 30ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த சிலர், காந்தியின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காந்தியின் உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்படும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், மகாசபா அமைப்பினர் சிலர் கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இதில் தொடர்பு உடைய சிலர் கைது செய்யப்பட்ட தோடு 13 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. காந்தியின் உருவ பொம்மையை எரித்த செயலுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சிகளும் பல அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்து மகாசபா அமைப்பின ருக்கு எதிராக போராட்ட அறிவிப் பையும் காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "இந்து மகாசபா அமைப்பைக் கண்டித்து மாநிலத் தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெறும்," என்று தெரிவித்தார்.
காந்தியின் உருவ பொம்மையைச் சுட்ட சம்பவம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
1 mins read

