மம்தா: இதற்கு மேலும் போராடுவேன்

இந்தியாவின் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தனது ‘தர்ணா’ ஆர்ப்பாட்டத்தை நேற்று முடித்தார். அந்த ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட 48 மணி நேரம் நீடித்தது.

பல்லாயிரக்கணக்கான சிறு தொகை முதலீட்டாளர்கள் மோசடி செய்யப்பட்டதன் தொடர்பில் விசாரணை நடத்த அந்த மாநிலத்திற்குச் சென்றிருந்த இந்திய மத்திய புலனாய்வு அதிகாரிகளை மேற்கு வங்க போலிஸார் தடுத்தனர். மத்திய புலனாய்வு அதிகாரிகளின் மூலம் திரு மோடி செயல்படுவதாகவும் தனது நிர்வாகத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதே திரு மோடியின் நோக்கம் என்றும் திருவாட்டி மம்தா குற்றம் சாட்டுகிறார்.

இந்த ஆர்ப்பாட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் வெற்றி என்று அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸின் தலைவர் திருவாட்டி மம்தா நேற்று தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர், திருவாட்டி மம்தாவைக் காணச் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். 

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மாநில போலிஸிடம் இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று கேட்டுக்கொண்டது. இந்தியாவில் வரும் மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. திரு மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாகி வரும் இவ்வேளையில் இப்புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

Loading...
Load next