கிரண் பேடியின் மாளிகையை இரண்டாவது நாளாக முற்றுகையிடும் நாராயணசாமி

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி, தமது தொண்டர்களுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சாலையில் செல்வோர் இருக்கைவார் அணிவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதும் இவ்வாரம் கட்டாயமாக்கப்பட்டது. இந்த விதிமுறை செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கிரண் பேடி புதுச்சேரியில் ஆங்காங்கு சோதனைகளை நேரடியாகவே நடத்தி வந்தார். 

கிரண் பேடியின் இந்த நடவடிக்கையால் தம்மால் அரசாங்கத்தை நடத்த முடியவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார். நாராயணசாமியும் அவரைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கிரண் பேடிக்கு எதிரான வாசகங்களை முழங்கிக்கொண்டு அவரது மாளிகையைச் சுற்றி அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆளுநர் மாளிகையின்முன் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாராயணசாமியின் இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்று கிரண் பேடி அவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டார். இருவரும் பேச்சுவார்த்தையில் இறங்க கிரண்பேடி நாராயணசாமிக்குத் தமது கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.