ரயிலில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரல்: 38 நிமிடங்களில் பொருத்தப்பட்டது

மும்பை: மும்பையைச் சேர்ந்த 53 வயது சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி முன்வந்தார்.
இதையடுத்து சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து, கல்லீரல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு மின்சார ரயிலில் பரேலில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 38 நிமிடப் பயணத்துக்குப் பிறகு அந்தக் கல்லீரல் நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. முதல்முறையாக உடல் மாற்று சிகிச்சைக்காக ரயிலில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவே சாலையில் கொண்டு சென்று இருந்தால் 2 மணி நேரமாகி இருக்கும்.