சவூதி அரேபிய இளவரசருக்கு மோடி நேரடி மரியாதை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசாங்கத்தின் மரபுக்கு மாறாக, சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது மின் சல்மானை நேற்று விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்றார்.

வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை இந்தியப் பிரதமர்கள் விமான நிலையங்களில் நேரடியாக வரவேற்பதில்லை. அவர்களின் சார்பாக அரசாங்க அதிகாரி அல்லது இளைய அமைச்சர் ஒருவர் அனுப்பப்படுவார்.

இளவரசர் சல்மானின் விமானத்திற்கு அருகே அந்த இரு தலைவர்களும் கை குலுக்கி நட்பார்ந்த முறையில் உரையாடிக்கொண்டிருந்ததைக் காட்டும் படம் ஒன்றை இந்திய வெளியுறவு அமைச்சு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. “இருநாட்டு உறவில் இது ஒரு புதிய அத்தியாயம்,” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு ஏற்கனவே சென்றிருக்கும் அந்த இளவரசருடன் திரு மோடி இன்று கலந்துரையாடலில் ஈடுபடுவார். இந்தியாவின் தேசிய முதலீடு, உள்கட்டமைப்பு நிதியத்தில் இளவரசர் சல்மான் துவக்க முதலீடு ஒன்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்