சவூதி இளவரசர்: இந்தியாவுடன் செயலாற்ற தமது நாடு தயார்

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் செயலாற்ற தமது நாடு தயார் என்று சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது சல்மான் தெரிவித்துள்ளார் 

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு சால்மான், இந்தியாவுடனான ஒத்துழைக்க சவூதி அரேபியா விரும்புவதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் அக்கறைக்குரிய ஒன்று. புலனாய்வு கண்டுபிடிப்புகளைப் பகிர்வது உட்பட, நாங்கள் பல்வேறு வழிகளில் இந்தியாவுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்,” என்றார் அந்த இளவரசர்.

காஷ்மீரில் ராணுவ வாகனத்திற்கு நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு இளவரசர் சல்மானின் வருகை நிகழ்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு, கடற்படை, இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.