இந்தியா: கண்காணிப்பில் பாகிஸ்தான் இருக்கவேண்டும்

பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் நீடித்திருக்கவேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவத்தினர் மீதான வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள ‘ஜெய்ஷ்-இல்-முகம்மது’ குழு பொறுப்பேற்றதை அடுத்து இந்தியா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான அனைத்துலக நிதியாதரவு, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரான முயற்சிகளை எடுக்க  உருவாக்கப்பட்ட நிதி நடவடிக்கை செயல் படை (Financial Action Task Force) என்ற அனைத்துலக அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலைத் தயாரித்தது. இந்த அமைப்பினர் இந்த வாரம் பாரிசிஸ் கூட்டங்கள் நடத்தி வந்தனர். அவர்களது பட்டியலில் இருந்து தான் நீக்கப்படவேண்டும் என்பது பாகிஸ்தானின் விருப்பமாக உள்ளது. 

பொருளியல் நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதால் அனைத்துலக நிதிச்சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது. மேலும், நிதியமைப்புகளின் கூடுதல் கண்காணிப்புக்கு அந்நாடு உட்படுத்தப்படுகிறது. 

காஷ்மீரில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மோசம் அடைந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து வரும் ஏற்றுமதிகளின் மீது இந்தியா 200 விழுக்காடு தீர்வை விதித்ததுடன் அதற்கான வர்த்தகச் சலுகைகளையும் நீக்கியுள்ளது.