கர்நாடக துணை முதல்வர்: நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை

தேவநகரி: கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடகத் துணை முதல் அமைச்சர் பரமேஸ்வரா உரையாற்றினார்.  அப்போது அவர் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன்.  நான் தலித் என்பதால்தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை. பின்னர் தயக்கத்துடன் துணை முதலமைச்சர் பதவியை விருப்பமின்றி ஏற்றேன்.   இதேபோன்று தலித் காங்கிரஸ் தலைவர்கள் பி. பசவலிங்கப்பா , கே.எச். ரங்கநாத், மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் இதன் காரணமாகவே முதல்வர் வாய்ப்பை இழந்தனர். இவர்கள் அனைவரும் முதல்வராக தகுதி உள்ளவர்கள். ஆனால் தலித் என்பதாலே பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று திரு பரமேஸ்வரா தெரிவித்தார்.
குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி அளித்ததில் காங்கிரசில் சிலர் அதிருப்தியில் இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் பரமேஸ்வராவின் இந்தக் கருத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.