300 பயங்கரவாதிகள் கொன்றொழிப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன் குவா மாநிலம், பாலாகோட் எனும் இடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்திய விமானப் படை அதிரடித் தாக்குதல் நடத்தி, அழித்தொழித்தது.  இதில் ஏறக்குறைய 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இம்மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்துமீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதவிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கர வாதி மசூத் அசாரை தலைவராகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றது.
அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய இந்தியா, அதற்குத் தக்க பதிலடி கொடுக் கப்படும் என சூளுரைத்தது.
இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படை 12 ‘மிராஜ் 2000’ வகை விமானங்கள் மூலம் பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாமைக் குண்டுவீசி அழித்தது. ஆயிரம் கிலோ எடைகொண்ட, ஆறு குண்டுகள் வீசப்பட்டன என அரசாங்க வட்டாரங்களைக் குறிப்பிட்டு ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விஜய் கோகலே இந்தத் தாக்குதலை உறுதி செய்தார்.
“பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வரும் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு பாகிஸ்தானுக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறோம். ஆனால், அப்படி எதுவும் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த ஜெய்ஷ் -இ-முகம்மது திட்டமிட்டு வரு வதாக நம்பத்தகுந்த உளவுத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆபத்தைக் களையவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அதிரடித் தாக்குதலில் இறங்குவது அவசியமாகிவிட்டது.