உலக நாடுகளுக்கு சுஷ்மா விளக்கம்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவிடம் விளக்கமளித்துள்ளார். தெற்காசிய வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் கட்டிக்காப்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பொதுவான குறிக்கோள் என்பதைத் திரு போம்பியோ, திருமதி சுஷ்மாவிடம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் திருமதி சுஷ்மா பேசியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளையும் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கேட்டு வருகின்றன. இந்நிலையில் திருமதி சுஷ்மா நேற்று காலை சீனாவுக்குப் புறப்பட்டார். பயங்கரவாதத் தடுப்பு பற்றிய சந்திப்பில் அவர் ரஷ்யா, சீனா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவார். 

ஆகாயத் தாக்குதலில் கிட்டத்தட்ட 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள பயங்கரவாத முகாம்களில் மொத்தம் ஆறு வெடிகுண்டுகள் இறக்கப்பட்டதாக  இந்தியாவின் ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனம் கூறியது. இதற்கு நேர்மாறாக, விமானத் தாக்குதலால் பாகிஸ்தானில் எவரும் காயமடையவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. 

ஆயினும், இந்தியத் துருப்பினருக்கும் பாகிஸ்தானிய துருப்பினருக்கும் இடையே நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானில் இரண்டு பிள்ளைகள் உள்பட பொதுமக்கள் நால்வர் உயிரிழந்ததாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள நக்யால் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மீது இந்திய பீரங்கிக் குண்டு விழுந்ததாகப் பாகிஸ்தானின் பேரிடர் நிர்வாக அதிகாரி ஷாரிக் டரிக் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பாகிஸ்தானின் மற்றொரு பகுதியில் இதுபோல குண்டு சுடப்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை. அப்போது பங்ளாதே‌ஷின் சுதந்திரத்திற்காக இந்தியா போராடி பாகிஸ்தானை எதிர்கொண்டது.