பாகிஸ்தான் பிரதமர்: விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்

இந்திய போர்விமானி ஆகாயப்படைப்பிரிவின் தளபதி ‘விங்க் கமாண்டர்’ அபிநந்தன் நாளை (மார்ச் 1ஆம் தேதி ) விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். அவரைப் பிடித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை மேலும் மோசமடைந்தது.

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தற்காலிக தூதரை நேற்று இந்திய வெளியுறவு அமைச்சு வரவழைத்து, பாகிஸ்தானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்துலக மனிதாபிமான சட்டங்களையும் ஜெனீவா கோட்பாடுகளையும் மீறிய வகையில் பாகிஸ்தான், காயமடைந்த வீரரின் நிலைமையை காணொளியின்வழி “மிகக் கொச்சையாக” வெளிக்காட்டியது என்று இந்தியா சாடியது. காயமடைந்த விமானியைக் காட்டும் காணொளிகளை பாகிஸ்தான் அடுத்தடுத்து வெளியிட்டது குறித்து இந்தியா இவ்வாறு கூறியது. 

இந்தியா அவரது உடனடி வருகையை எதிர்பார்ப்பதாக தெரிவித்தது. தனது தடுப்புக்காவலில் இருக்கும் அபிநந்தனின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டிருந்தது.

விமானி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

எந்த அசம்பாவிதமுமின்றி அபிநந்தன் வீடு திரும்பவேண்டும் என்று இளையர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழக துணையமைச்சர் ஓ.பன்னீர் செல்வர் உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் கோரி வருகின்றனர்.