இந்தியா: அமெரிக்கா தயாரித்த ‘எஃப்-16’ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது

காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய ஆகாயத் தாக்குதலில்  ‘எஃப்-16’ ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. 

இந்த விமானங்களைத் தடுக்க இந்தியா ‘எம்ஐஜி-21 பிசன்’, ‘சூ-30 எம்கேஐ’, ‘மிராஜ் 2000’ ஆகிய ரகங்களைச் சேர்ந்த விமானங்களை அனுப்பியதாக இந்தியாவின் ஆகாயப் படையின் துணைத் தலைவர் ‘ஏர் வைஸ் மார்ஷல்’ ஆர்.ஜி.கே கப்பூர் நேற்று (பிப்ரவரி 28) தெரிவித்தார். ஆயினும் பாகிஸ்தான்,  ‘எஃப்-16’ ரக விமானங்களைப் பயன்படுத்தியதை மறுத்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அதன் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

“எஃப்-16 போர்விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த உண்மையை பாகிஸ்தான் மறைக்க முயல்கிறது,” என்று  ‘ஏர் வைஸ் மார்ஷல்’ கபூர் தெரிவித்தார். இந்திய ராணுவத் தளங்களின் மீது குறிவைத்துத் தாக்க முயன்ற பாகிஸ்தானிய போர்விமானங்களை இந்திய போர் விமானங்கள் இடைமறித்ததாக அவர் கூறினார். 

பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட விமானங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது விதிமுறை என்று புதுடெல்லியைச் சேர்ந்த ராகுல் பேடி தெரிவித்தார். அந்த விமானங்கள் வேறொரு நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமாகி வருகிறது. புதிய எஃப்-16 ரக விமானங்களை வாங்குவதற்கான விலைக்கழிவுகளை வழங்க அமெரிக்கா 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உதவித் தொகையிலிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலரைக் குறைக்க முடிவு செய்தார். பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திரு டிரம்ப் குறைகூறினார்.

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதத் தளங்களில் இந்தியா ஆகாயத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதியில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகம்மதின் முகாம் ஒன்றைக் குறிவைத்து இந்தியா தாக்கியது. இதனை அடுத்து பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை அன்று பதில் தாக்குதலை நடத்தியது.

FB: அமெரிக்காவிடம் பெறப்பட்ட விமானங்கள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காகவா? பயங்கரவாதிகளைத் தற்காக்கவா? கேட்கிறது இந்தியா.