“உங்கள் அரசியலை நிறுத்திவையுங்கள்”: எதிர்க்கட்சிகளிடம் கூறும் மோடி

அரசியலுக்காக நாட்டை பலவீனப்படுத்தவேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டார். 

“மோடி போகலாம். இந்தியா தொடர்ந்து இருக்கும். உங்கள் அரசியலுக்காக இந்தியாவை பலவீனப்படுத்தாதீர்கள். முதலில் நாம் இந்தியர்கள். உங்கள் அரசியலை நிறுத்திவையுங்கள்,” என்று திரு மோடி, தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியபோது தெரிவித்தார். தனது அரசாங்கம் சொல்லின் மீதன்றி செயலில் நம்பிக்கை வைத்திருப்பதாகத் திரு மோடி தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக நேர்ந்த நிகழ்வுகள் இந்திய ஆயுதப் படையினரின் வலிமையைக் காட்டுவதாக அவர் கூறினார்.

ஆயினும், தன் மீதுள்ள வெறுப்பால் சில அரசியல் கட்சிகள் இந்தியாவையே வெறுக்கத் தொடங்கியுள்ளதாகத் திரு மோடி கூறினார். “இவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பாகிஸ்தானுக்குக் கைகொடுக்கிறது. இவர்களது வாக்கியங்கள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் வானொலி நிலையங்களிலும் படிக்கப்பட்டு வருகின்றன,” என்று அவர் சொன்னார்.

இந்தியாவின் இருபத்து ஒன்று எதிர்கட்சித் தலைவர்கள் ஆகாயத் தாக்குதல்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று முன்தினம் இணைந்தனர். இந்திய ஆகாயப் படையை எதிர்க்கட்சிகள் பாராட்டினாலும் அனைத்துக் கட்சி சந்திப்புக்கு திரு மோடி ஏற்பாடு செய்யவில்லை என்பது குறித்து விமர்சித்தனர். நெருக்கடியான தருணத்தின்போது பாரதிய ஜனதாக் கட்சியின் ஊழியர்களுடன் திரு மோடி காணொளி வழியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டதை டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறைகூறினார். இது தொடர்பில் கருத்துரைத்த காங்கிரஸ் கட்சி, திரு மோடி மீண்டும் பிரதமராகும் வாய்ப்புக்காக அலைகிறார் என்றும் எந்த நேரத்தில் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றும் காங்கிரஸ் சாடியது. 

இந்தியாவில் காலங்காலமாக நீடித்துள்ள காங்கிரசின் குடும்ப அரசியல் கலாசாரத்திற்கு எதிராக முதன்முதலாகக் குரல்கொடுத்தது தமிழகத்தின் முன்னைய முதலமைச்சர் சி. ராஜகோபாலச்சாரி என்று திரு மோடி தெரிவித்தார். “ராஜாஜியின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்,” என்றார் அவர். 

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,900 தமிழ்நாட்டு மீனவர்களின் விடுதலைக்குத் தமது அரசே காரணம் என்றும் திரு மோடி சொன்னார். 

போர்விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஒவ்வோர் இந்தியரும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி கூறினார். பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட ‘விங் கமாண்டர்’ அபிநந்தன் குறித்து திரு மோடி நேரடியாகப் பேசியது இதுவே முதல் முறை.