ஆதாரங்களைக் கேட்கும் எதிர்க்கட்சியினரைச் சாடும் மோடி

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆகாயத் தாக்குதல் குறித்த ஆதாரங்களைக் கேட்டிருந்த எதிர்க்கட்சியினரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறைகூறியுள்ளார். தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் மாண்டதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அமிட் ஷா திங்கட்கிழமை குஜராத்தின் பொதுக்கூட்டத்தின்போது கூறினார். இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வ எண்ணிக்கை ஒன்றைக் கொடுக்காத பட்சத்தில் திரு ஷாவின் தகவல்கள் ஆதாரபூர்வமானதா என்று எதிர்க்கட்சியினரும் இந்திய ஊடகங்களும் கேட்டு வருகின்றன.

ஆதாரங்களுக்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“பயங்கரவாதத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒடுக்க நமது ராணுவம் ஈடுபடும் நேரத்தில் நாட்டுக்குள்ளே சிலர் அவர்களது உற்சாகத்தைக் குலைத்து எதிரிகளை ஊக்கப்படுத்தும் முறையில் நடந்துகொள்கின்றனர்,” என்று திரு மோடி, தேர்தல் கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இப்படி செய்வதால் இவர்களுக்கு என்ன நன்மை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பதற்றநிலை கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் சற்று குறைந்துள்ளது. ஆயினும், தூப்பாக்கிச் சூடுகள் ஆங்காங்கே நடப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.