ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதக் கட்டடம் பாகிஸ்தானில் இன்னும் நிற்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

வடகிழக்கு பாகிஸ்தானில்  ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பினரின் சமயப் பள்ளி ஒன்று இந்திய ஆகாயத் தாக்குதலால் தரைமட்டமாகாமல் இன்னும் நிற்பதைக் காட்டும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகாயத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்தப் படங்களை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள தனியார் செயற்கைக்கோள் நிறுவனமான ‘பிளேனட் லாப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டது.

இதே சுற்றுவட்டாரத்தைக் காட்டும் கடந்தாண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்ட படத்திற்கும் அண்மையில் எடுக்கப்பட்ட படங்களுக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை. கட்டடச் சுவர்களில் ஓட்டை, தீ மூண்டதற்கான அறிகுறிகள், சேதமடைந்த மரங்கள் போன்ற ஆகாயத் தாக்குதலுக்கான அறிகுறிகள் எதுவும் படங்களில் தென்படவில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன என்று இந்திய அரசாங்கம் கூறியது இப்போது மேலும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சையும் தற்காப்பு அமைச்சையும் தொடர்புகொண்டபோது எந்தப் பதிலும் வெளிவரவில்லை என்று ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் பதிலளித்தது. 

இந்தியாவின் தாக்குதலால் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோக்கலே தெரிவித்தார். இதனை பாகிஸ்தான் மறுக்கிறது. பாகிஸ்தானிய விமானங்கள் கொடுத்த நெருக்கடியால் இந்திய விமானங்கள் தங்களது குண்டுகளைக் காலியாக இருக்கும் மலைப்பகுதி ஒன்றில் போட்டுவிட்டதாகவும் இதனால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்தது.