பிரபலமாகி வரும் ‘அபிநந்தன்’ மீசை

பாகிஸ்தானில் பிடிபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய போர்விமானி வி. அபிநந்தன் மீதான அபிமானத்தால் இந்தியாவிலுள்ள ஆடவர்கள் பலரும் அவரைப் போலவே மீசை வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.

இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காஷ்மீர் பகுதியில் இந்திய துணை ராணுவத்தினருக்கு எதிராக நடந்த தற்கொலை தாக்குதலுக்கு ‘ஜெய்ஷ்-இ-முகம்மது’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலுள்ள நிலப்பகுதிகளின் மீது ஆகாயத் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே வான்வழி மோதல் ஏற்பட்டபோது தமிழகத்தைச் சேர்ந்த ‘விங் கமாண்டர்’ அபிநந்தனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஜெனிவா போர்க்கால விதிமுறைகளை மீறி, பாகிஸ்தானில் தாக்கப்பட்ட அபிநந்தனைக் காட்டும் காணொளிகளையும் படங்களையும் அந்நாட்டின் ராணுவம் வெளியிட்டது. அவற்றை பாகிஸ்தான் தனது சமூக ஊடகங்களிலிருந்து சில மணி நேரங்களில் நீக்கியபோதும் அவை மற்ற ஊடகங்களில் பரவின.

அபிநந்தன் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுவிக்கப்பட்டார். 

அவரைப் போன்ற மீசையைத் தங்களுக்கு வெட்டித்தருமாறு இந்தியாவிலுள்ள முடி திருத்துபவர்களிடமும் சவரக் கலைஞர்களிடமும் வாடிக்கையாளர்கள் பலர் கேட்டு வருகின்றனர். “ நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரின் தோற்ற அம்சங்களைப் பின்பற்ற எல்லோரும் விரும்புவர். உண்மையிலேயே அபிநந்தன் நமது நாட்டின் நாயகன்,” என்று 30 வயது திரு திரேன் மக்வானா தெரிவித்தார். இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள முடி திருத்தும் நிலையம் ஒன்றில் அவர் தமது மீசையை அபிநந்தனின் பாணியில் வெட்டிக்கொண்டார்.
நேற்று மட்டும் சுமார் மூன்று பேர் தமது கடைக்குள் வந்து இதுபோலவே கேட்டிருந்ததாகத் திரு மக்வானாவின் முடி திருத்துபவர் திரு ராஜேஷ் நை கூறினார்.