முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமோதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடியவுள்ளது. இதனால் புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதுடன், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பல அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக 15 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முதல் பட்டியலில் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெறவில்லை.

தேர்தல் தேதி கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்தப் பட்டியல் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சோனியா காந்தி வீட்டில் பல தலைவர்கள் குவிந்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.