தக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி

ஆசியாவின் ஆகப் பெரும் செல்வந்தர் முக்கேஷ் அம்பானி, தமது தம்பி அனில் அம்பானிக்காக 80 மில்லியன் டாலர் கடனைக் கட்டினார். சிறைத்தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருந்த அனில் அம்பானி இதனால் தப்பித்தார்.

உயிர் நீத்த தங்களது தந்தை விட்டுச் சென்ற சொத்து குறித்து இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பிறகு அந்தச் சொத்து இருவருக்கும் இடையே பிரிக்கப்பட்டது. முக்கேஷ் அம்பானியின் எண்ணெய், பெட்ரோல் ரசாயன வர்த்தகம் செழித்தது. ஆனால் இளையவரின் தொலைத்தொடர்பு, கட்டமைப்பு வர்த்தகங்கள் தோல்வியடைந்து கடனில் மூழ்கியது. தனது கடன்களைக் கட்ட முடியாத நிலையில் அனில் அம்பானி சிறையை எதிர்நோக்கியிருந்தார். 

அனில் அம்பானியின் மதிப்பு 2018ஆம் ஆண்டில் 31 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது அது 300 மில்லியனுக்குச் சுருங்கியுள்ளது. இதற்கு நேர்மாறாக, முக்கேஷ் அம்பானியின் மதிப்பு இப்போது 54.3 பில்லியனை எட்டியிருப்பதாக ‘புளூம்பர்க் பில்லியனேர் இண்டெக்ஸ்’ என்ற குறியீடு குறிப்பிட்டுள்ளது.

‘எரிக்சன் ஏபி’ நிறுவனத்திற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட்’ நிறுவனம் கொடுக்க வேண்டிய 5.5 பில்லியன் ரூபாய் (108 மில்லியன் வெள்ளி) பணத்தை முக்கேஷ் அம்பானி கட்டினார்.

“மதிப்புக்குரிய எனது அண்ணன் முக்கே‌ஷுக்கும் எனது அண்ணி நித்தாவுக்கும் எனது உண்மையான, உளமார்ந்த நன்றி. தக்க நேரத்தில் இந்த உதவியைச் செய்து அவர்கள் குடும்பப் பண்புகளைக் கட்டிக் காத்துள்ளனர்,” என்று அனில் அம்பானி கூறினார்.