இந்தியா புதன்கிழமை (மார்ச் 27) மேற்கொண்ட செயற்கைக்கோளை அழிக்கும் ஆயுதச் சோதனை போல மற்ற நாடுகள் செய்ய முயற்சிக்கக்கூடாது என அமெரிக்காவின் இடைக்காலத் தற்காப்பு அமைச்சர் பேட்ரிக் ஷனஹான் எச்சரித்திருக்கிறார். இத்தகைய சோதனையால் விண்வெளியில் விட்டுச்செல்லப்படும் சிதைவுகள் "பாதிப்பை" உண்டாக்கக்கூடும் என்றார் அவர்.
புளோரிடாவிலுள்ள அமெரிக்க ராணுவத்தின் தென் படைப்பிரிவுக்கு வருகையளித்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தனது சொந்த செயற்கைக்கோளைத் தகர்ப்பதற்காக இந்தியா ஏவுகணை பாய்ச்சி நடத்திய சோதனையை அமெரிக்கா இன்னமும் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். செயற்கைக்கோள்களை வெற்றிகரமாகத் தகர்க்கும் ஆயுதங்களால் சிதைவுத்திரள் உருவாக்கப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தச் சிதைவுத்திரள் மற்ற பொருட்களோடு மோதி, பூமியின் உள்வட்டச் சுற்றுப்பாதையில் தொடர் விளைவுகள் உண்டாக்கக்கூடும்.
ஆனால், புதன்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் சிதைவுகளால் நேரக்கூடிய ஆபத்துகளை இந்திய வெளியுறவு அமைச்சு மட்டுப்படுத்தியது. பூமியின் தாழ்வான உள்வட்டச் சுற்றுப்பாதையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதால், சிதைவுகள் "அழுகிப்போய், சில வாரங்களுக்குள் பூமிமீது விழுந்துவிடும்," என்று அமைச்சு குறிப்பிட்டது.
அமெரிக்க ராணுவத்தின் வியூக உத்திபூர்வ படைப்பிரிவு இந்தியாவின் ஏவுகணை சோதனையின் 250க்கும் மேலான சிதைவுத் துணுக்குகளைக் கண்காணித்து வருவதாகவும், "அவை பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையும்வரை தேவையான அணுக்கக் கண்காணிப்பு அறிவிப்புகள்" வெளியிடப்படும் என்றும் பென்டகன் பேச்சாளர் லெப்டினன்ட் கர்னல் டேவ் ஈஸ்ட்பர்ன் கூறினார்.

