நிஸாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறை

நிஸாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறை

1 mins read

தெலுங்கானா மாநிலம், நிஸாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இப்படி இருக்க, நிஸாமாபாத் தொகுதியில் மொத்தம் 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் அத்தொகுதியின் இப்போதைய எம்.பி.யுமான கவிதா அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மேலும் ஆறு கட்சிகள் களமிறங்கி இருக்கும் நிலையில், 178 விவசாயிகள் சுயேச்சையாக நிற்கின்றனர். மஞ்சள், சோளம் ஆகியவற்றுக்குத் தெலுங்கானா மாநில அரசு உரிய விலை பெற்றுத் தராததால் முதல்வரின் மகளை எதிர்த்துப் போட்டியிடுவதாக அந்த விவசாயிகள் அறிவித்தனர். அந்த 185 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவதைத் தவிர தேர்தல் ஆணையத்திற்கு வேறு வழி இல்லாமல் போனது. "வேட்பாளர்கள் அனைவருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படும். எத்தகைய வாக்குச்சீட்டைப் பயன் படுத்துவது, வாக்குச்சீட்டின் வடிவமைப்பு ஆகியவை தொடர்பில் மத்திய தேர்தல் ஆணையத்தை ஆலோசித்து, அதன் அடிப்படையில் வாக்குச்சீட்டு அச்சிடப்படும்," என்றார் தெலுங்கானா தலைமைத் தேர்தல் ஆணையர் ரஜத் குமார். 2004ஆம் ஆண்டு முதல் நாடாளு மன்றத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப் பட்டு வருகின்றன.