பாஜகவுக்கு ஆதரவாக முப்பது நாடுகளில் பிரசாரம்

பாஜகவுக்கு ஆதரவாக முப்பது நாடுகளில் பிரசாரம்

2 mins read

புதுடெல்லி: பாஜக ஆதரவு வெளி நாடு வாழ் இந்திய நண்பர்கள் அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முப்பது நாடுகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். பாஜகவின் வெளிநாடு வாழ் இந்திய நண்பர்கள் அமைப்புக்கு ஏறக்குறைய முப்பது நாடுகளில் கிளை உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் இந்த அமைப்பினர் பாஜகவுக்கும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு நல்ல பலன் கிடைத்து பாஜக வெற்றி பெற்று மோடி பிரதம ரானார். இதேபோல இவ்வாண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வசிக்கும் நாடுகளில் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பாஜகவுக்கு வாக்கு அளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கவிருக்கின்ற னர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓப்ரா ஹவுஸில் இந்த அமைப்பின் சார்பில் நேற்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக் களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுபோல பல நாடுகளில் வார இறுதியில் இதுபோன்ற கூட்டங்களையும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்த பாஜக ஆதரவு அமைப்பினர் திட்டமிட்டு வருகின்றனர். வெளிநாடுகளின் பிரசாரம் குறித்து பாஜகவின் வெளி நாடுகள் விவகாரத் துறை பொறுப்பாளர் விஜய் சவுத்தை வேல் விளக்கினார். "கடந்த முறை முறையாகத் திட்டமிடாமல் பிரசாரம் மேற் கொண்டோம். ஆனால் இம்முறை சரியாக திட்டமிட்டு வருகிறோம். மேலும் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய வற்றில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம்," என்றார். ஆனால் பாஜகவுக்கு மட்டு மல்லாமல் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளி நாடு வாழ் இந்தியர்களின் ஆதரவை திரட்ட முயற்சி மேற் கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 71,735 பேர், தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். இதில் 66,866 பேர் ஆண்கள், 4,849 பேர் பெண்கள், 20 பேர் திருநங்கைகள் ஆவர்.