இந்தியாவின் காங்கிரஸ் கட்சி வரும் பொதுத்தேர்தலுக்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் திட்டம், வேலைகளை உருவாக்கும் வர்த்தகங்களுக்கான அனுகூலங்கள், 1870ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டு நிந்தனைச் சட்டத்தின் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை தன்வசம் ஈர்க்க அக்கட்சி மும்முரமாக முயல்கிறது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மூன்று மாநிலத் தேர்தல்களில் வென்றபோதும் காங்கிரஸ் கட்சி தற்போதைய கருத்துக்கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பிந்திய நிலையில் தொடர்ந்து இருக்கிறது.
விவசாயிகளுக்கான தனி வரவு செலவு அறிக்கையைத் தொடங்குவது, பெண்ணுரிமைகளை மேம்படுத்துவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லியில் நிகழ்ந்த பிரசாரக் கூட்டம் ஒன்றில் அறிவித்தார். "இந்தியாவுக்கான வருங்கால செயல்திட்டம் இது," என்று திரு ராகுல் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். "இப்போது அந்தத் திட்டத்திற்கு தேவை உங்கள் ஆதரவும் வாக்கும்தான்," என்றார் அவர்.
ஒன்றிணைக்கப்பட்ட பொருள், சேவை வரியை எளிமைப்படுத்தவும் வேலையில் அதிகம் பேரை சேர்க்கவும் காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் திரு ராகுல் அறிவித்தார்.
இது ஆடம்பரமான தேர்தல் அறிக்கை என்று 'கேபிடல் இகானமிக்ஸ்' பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளையைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் ஷிலான் ஷா தெரிவித்தார். "வருமானத் திட்டம் பாராட்டுக்குரியதாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துவது கடினம். இந்தச் சலுகைகளை வழங்குவதற்குத் தேவைப்படும் நிதியியல் கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை," என்றும் அவர் கூறினார்.
காஷ்மீரைச் சேர்ந்த கிளர்ச்சியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த மாணவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நாட்டு நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தியதை அடுத்து, காங்கிரஸ் இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் என அறிவித்தது. நாட்டு நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட அந்தச் சட்டத்திற்கான தேவை இப்போது இல்லை என்றும் காங்கிரஸ் கூறுகிறது.
மேலும், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ராணுவப் படையினரின் சிறப்பு அதிகாரங்களை விவரிக்கும் சட்டங்களுக்குத் திருத்தங்களைச் செய்யப்போவதாகவும் காங்கிரஸ் சூளுரைத்திருந்தது. ஆனால், காங்கிரசின் இந்த தீர்மானம் இந்தியத் துருப்புகளுக்குப் பாதகமாக அமையும் என்று பாரதிய ஜனதா குறைகூறியுள்ளது.

