காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டால் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு ஆட்டங்கண்டுள்ளதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நாடாளுமன்ற இடங்களைக் குறிக்கும் வகையில் "நாடும் நமதே நாற்பதும் நமதே" என்று அவர் சூளுரைத்தார்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னால் நிலவும் மர்மம், கோடநாடு கொள்ளை வழக்கு ஆகியவற்றின் தொடர்பில் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் தாம் கேள்விகளை எழுப்பியபோதும் தமிழகத்தின் ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எந்தப் பதிலும் இதுவரை வெளிவரவில்லை என்றார் ஸ்டாலின்.
மேலும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அவ்வப்போது சென்றாலும் அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்றும் அவர் கூறினார்.

