2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 1.3 விழுக்காடு வளர்ந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. 'புளும்பர்க்' ஆய்வாளர்கள் பங்கேற்ற கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட 1.4 விழுக்காட்டைவிட இது சற்று குறைவாக உள்ளது.
2009ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து பதிவான ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான காலாண்டு வளர்ச்சி விகிதங்களில் இது ஆகக் குறைவு என்று டிபிஎஸ் வங்கியைச் சேர்ந்த மூத்த பொருளியல் நிபுணர் எர்வின் சியா தெரிவித்தார்.
ஆயினும் பொருளியல் நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் தூரமாக இருப்பதாகவும் தற்போதைய மந்தம் தற்காலிகமானதே என்றும் அவர் கூறினார்.
தற்போதைய வளர்ச்சி சுழலின் அடிமட்டத்தில் சிங்கப்பூர்ப் பொருளியல் இருக்கக்கூடும் என்றும் இவ்வாண்டின் பிற்பகுதியில் பொருளியல் வெகுவாக முன்னேறக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் திரு சியா கூறினார்.

