இந்திய நாடாளுமன்றத்தின் முதற்கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
வாக்குப்பதிவு, மத்திய அரசு பற்றிய மக்களின் எண்ணங்கள் உள்ளிட்டவற்றைக் கட்சித் தலைவர்கள் விவாதிப்பர் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அடுத்தடுத்து கையாளவேண்டிய வியூகங்கள் குறித்தும் அவர்கள் பேசுவர்.
சந்திப்புக்குப் பிறகு திரு மோடி மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவார். இன்றிரவு அவர் தமிழகத்தை அடைந்து மதுரையிலுள்ள 'கேட்வே' ஹோட்டலில் தங்குவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர வேறு ஊரில் முதன்முதலாகத் திரு மோடி தங்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
இரண்டு தலைவர்களின் வருகையால் மதுரையிலுள்ள அதிகாரிகள் விழிப்புநிலையில் உள்ளனர். அங்கு போலிசாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

