‘ராணுவத்தை அரசியல்படுத்த விருப்பமில்லை’

ராணுவத்தை அரசியல்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கும் விருப்பமில்லை என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

கல்விமான்கள், இளம் சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட சந்திப்பில் திருவாட்டி நிர்மலா இவ்வாறு தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டில் மும்பை தாக்குதலுக்குப் பின் காங்கிரஸ் வழிநடத்திய அரசாங்கத்திற்கு இருந்த பலவீனத்தையும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு திரு மோடி தலைமையிலான அரசுக்கு இருக்கும் பலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறு என்ன இருக்கிறது என்றும் திருவாட்டி நிர்மலா சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு அரசு என்ன செய்கிறது என்று மக்கள் கடுமையாகக் கேட்டிருந்ததைத் திருவாட்டி நிர்மலா சுட்டினார். 

அரசியல்படுத்துவதற்கும் அரசியல் உறுதிக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்றும் அவர் கூறினார்.