‘வரிச்சோதனைகள் என்னைத் தடுக்காது’

பாரதிய ஜனதா அரசாங்கம் தனக்கு எதிராகச் சதிசெய்து வருவதாகவும் தனது தேர்தல் வெற்றியை அக்கட்சி தடுக்கவே முடியாது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவர்களில் ஒருவரான கனிமொழி சூளுரைத்திருக்கிறார். 

பழம்பெரும் அரசியல் தலைவரான அமரர் மு. கருணாநிதியின் மகளான கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தினர்.

சோதனையில் எந்தப் பத்திரமோ பொருளோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று கனிமொழி கூறினார். திமுகவினரைப் பயமுறுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

சோதனை அதிகாரிகளுடன் கனிமொழி அமைதியான முறையில் ஒத்துழைத்தபோதும், அந்நேரத்தில் திமுக தொண்டர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்களை விடாமல் முழங்கிக்கொண்டு இருந்ததாக என்டிடிவி தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் வரித்துறையினர் தமிழகத்திலுள்ள 18 இடங்களில் சோதனை நடத்தினர்.