சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வாதாடினார். சட்ட ஒழுங்குப் பிரச்சினை, இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் வாதாடினார். பின்னர் இதுபற்றி கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களைப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர். 'பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத்தான் தகுதி நீக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்' என்றும் நீதிபதிகள் கூறினர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்துத் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது. தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்தானது. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
2 mins read

