தமிழ்நாட்டின் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை (18 ஏப்ரல்) நடைபெறுகிறது. வேலூரைத் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டு சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணைந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான போட்டி இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் அதிகம் கவனிக்கப்படுகிறது. அத்துடன் தமிழகத்திலுள்ள 18 மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியிலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நிகழவுள்ளது.
வாக்குப்பதிவு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய 63,951 போலிசார், 27,400 துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

