லாகூர்: பேருந்தில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி சுட்டுக்கொன்ற சம்பவம் பலுசிஸ்தான் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் ஆயுத கும்பல்களால் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த சில பேருந்துகளை ஆயுத கும்பலைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். ராணுவச் சீருடையில் காணப்பட்ட அவர்கள், பயணிகளின் அடையாள அட்டையைச் சோதித்த பின்னர் 16 பேரை மட்டும் கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்றனர். அவர்களில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இருவர் மட்டும் காயங்களுடன் உயிர்தப்பி உள்ளனர். காயமடைந்த நிலையிலும், இந்த இரு பயணிகளும் சம்பவ இடத்தில் இருந்து வேகமாக ஓடி அருகே உள்ள சோதனைச் சாவடிக்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளனர். இதையடுத்து ஏராளமான போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதிலும் ஆயுத கும்பலைச் சேர்ந்த யாரையும் கைது செய்ய முடியவில்லை. அவர்கள் அதற்குள் தப்பியோடிவிட்டனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் எந்த ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பலுசிஸ்தான் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இப்பகுதியில் வன்முறை சம்பவஙகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேர் சுட்டுக்கொலை
1 mins read

