சித்தராமையா: மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்

சித்தராமையா: மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் தேவாங்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி. மஞ்சப்பாவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். "காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை மே 23ஆம் தேதி கவிழ்க்க புதிய முகூர்த்த நேரம் குறித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ஆம் தேதி அன்று மோடியின் ஆட்சி இருக்காது. கூட்டணி அரசு அமையாது. அது முடிவுக்கு வந்துவிடும். "இதுபோன்று நேரம் குறிப்பது பாஜக தலைவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடியூரப்பா இருக்கிறார். ஏற்கெனவே அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இரண்டு நாட்களில் வீழ்ந்துவிட்டார். "அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதலமைச்சர் ஆவேன். அப்போது வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் தலா 10 கிலோ அரிசி வழங்குவேன். இதில் என்ன தவறு உள்ளது. கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் வெற்றி பெறும்," என்று சித்தராமையா கூறினார்.